Breaking News

1-9ஆம் வகுப்பு வரை 50%; 10- 12 ஆம் வகுப்பு வரை 35% பாடத்திட்டம் குறைப்பு அமைச்சர் செங்கோட்டையன்

1-9ஆம் வகுப்பு வரை 50%; 10- 12 ஆம் வகுப்பு வரை 35% பாடத்திட்டம் குறைப்பு அமைச்சர் செங்கோட்டையன்
1- 9ஆம் வகுப்பு வரை 50 சதவீதமும், 10- 12ஆம் வகுப்பு வரை 35 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வி மற்றும் இளைஞர் நல, விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய அளவில் பரிசு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு இன்று பரிசு வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பாடத்திட்டக் குறைப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். நிபுணர் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு தற்போது 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 50 சதவீதமும் 10- 12 ஆம் வகுப்பு வரை 35 சதவீதமும் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. முதல்வரிடம் ஒப்புதல் பெற்றே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிற மாநில மாணவர்களுடன் போட்டியிட வேண்டும் என்பதால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 65 சதவீதப் பாடங்களைக் கற்பிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு குறித்துக் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகு, முதல்வர் முடிவெடுப்பார்.

விளையாட்டு வீரர்களுக்குக் கூடுதல் இட ஒதுக்கீடு

அரசு வேலைகளில் விளையாட்டு வீரர்களுக்குகான இட ஒதுக்கீடு 3 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் இருந்தே விளையாட்டுத் திறன்களை வளர்க்க, உள்ளூர் அமைப்புகளில் ரூ.67 கோடி செலவில் விளையாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோலத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய விளையாட்டுகளில் பதக்கங்களை வெல்பவர்களுக்குப் பரிசுகள் வழங்க ரூ.9.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

1 comment:

  1. 12 பாடத்திட்டங்கள் குறைப்பு வெளியீடு
    Photo அனூப்பமுடியும

    ReplyDelete