Breaking News

ஹிந்தியில் நேற்று பிரதமர் மாணவர்களுடன் என்னதான் பேசினார்? ஒன்றும் புரியாமல் பார்த்த தமிழக மாணவர்கள்!

ஹிந்தியில் நேற்று பிரதமர் மாணவர்களுடன் என்னதான் பேசினார்? ஒன்றும் புரியாமல் பார்த்த தமிழக மாணவர்கள்!



     பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பயம், மன அழுத்தம், பதற்றத்தை போக்கும் வகையில், இரண்டு ஆண்டுகளாக, பிரதமர்மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 'பரிக் ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தேர்வு எழுதும் மாணவர்கள், அவர்களது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன், பிரதமர் கலந்துரையாடுவது வழக்கம். மூன்றாவது ஆண்டாக, நேற்று, டில்லி தால்கடரோ அரங்கில், இந்த நிகழ்ச்சி நடந்தது. கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட, 2,000 மாணவர்கள் நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். தமிழகத்திலிருந்து, 66 மாணவர்கள் பங்கேற்றனர். முதல் முறையாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், 50 பேர், இந்த நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றனர்.


   இந்த நிகழ்ச்சியினை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பார்க்க வேண்டும் எனவும் அதனை புகைப்படம் எடுத்து அறிக்கையாக கொடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனால் அனைத்து பள்ளிகளிலும் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஹிந்தியில் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை!


   பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு கேள்வி! , இப்படி ஒன்றுமே புரியாத நிகழ்ச்சியினை தமிழக மாணவர்கள் ஏன் பார்க்க வேண்டும்? இனியாவது இது போன்ற நிகழ்ச்சியினை தமிழாக்கம் செய்து வெளியிட்டால் நன்று! மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தும், ஊக்கப்படுத்தியும், அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதாவது: ( தமிழாக்கம் )


இதனை படித்து ஆசிரியர்களாவது மாணவர்களுக்கு கூறுங்கள்...

    பிரதமராகவும், குஜராத் முதல்வராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும், மாணவர்களுடன் கலந்துரையாடும் இந்த நிகழ்ச்சி தான், எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தநிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்தமானது எனக் கூறலாம்.



ஊக்கப்படுத்த வேண்டும்

    இதில், எதை வேண்டுமானாலும் நீங்கள் பேசலாம். இதைத் தான் பேச வேண்டும், அதைத் தான் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், உங்கள் மனதில் தோன்றியதை பேசலாம். தேர்வும், அதில் அதிக மதிப்பெண் பெறுவதும் தான் முக்கியம்; அது மட்டுமே எல்லா பிரச்னைக்கும் தீர்வு என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது. முதலில், அந்த எண்ணத்திலிருந்து மீண்டு வாருங்கள். அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே, எல்லா பிரச்னைக்கும் தீர்வாகி விடாது.தேர்வு என்பது, நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும் தான். பொதுத் தேர்வு என்பது, நம் ஒட்டுமொத்த கல்வி பயணத்தின் ஒரு அங்கம். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. தற்போதைய பெற்றோரிடையே, கவர்ச்சிகரமான சில திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. இந்த மனநிலையில் இருந்து, பெற்றோர் மாற வேண்டும்.தங்கள் விருப்பத்தை, குழந்தைகள் மீது திணிப்பதை விட, நம் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விஷயத்தில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.'படி... படி' என, குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்து, தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், நெருக்கடி இல்லாமல்எப்படி தேர்வு எழுத வேண்டும் என்பதை  விளக்கும்புத்தகங்களை படிக்கச் சொல்லுங்கள்.



அவசியம் இல்லை

   தேர்வு எழுதச் சொல்லும்போது, மன அழுத்தத்துடன் செல்ல வேண்டாம். மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.நீங்கள், உங்களை நம்ப வேண்டும். எதற்காக தயாராக வந்துள்ளீர்களோ, அதை செய்யுங்கள். தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது; அதை புறக்கணித்து விட முடியாது. அதற்காக, தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடக் கூடாது. தொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்; அது, நம் நேரத்தைவீணடித்து விடக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும், மொபைல்போன், 'டிவி' போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு அறை இருக்க வேண்டும்.அந்த அறைக்குள் செல்லும்போது, தொழில்நுட்பம் சார்ந்த எந்த கருவியையும், நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள், நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி போன்ற மூத்தவர்களுடன் நேரத்தை செலவிட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இளைஞர்கள், தங்கள் பங்களிப்பை தர வேண்டும். நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. இளைஞர்கள், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். தேர்வு ஒன்றை மட்டுமே நினைத்து, மன அழுத்தத்துக்கும், சோர்வுக்கும் ஆட்படக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடியின் கலந்துரையாடல், 'டிவி' சேனல்கள், ரேடியோ, சமூக வலைதளங்களில் நேரடியாக, ஒளி மற்றும் ஒலிபரப்பானது. நாடு முழுதும் பள்ளிகளில் இருந்தபடியே, மாணவர்கள், பிரதமரின் உரையை கேட்டனர்.



கிரிக்கெட் போட்டியை நினைவுபடுத்திய பிரதமர்

   பிரதமர் மோடி, மாணவர்களிடையே கலந்துரையாடியபோது, 2001ல், இந்தியா - ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டி குறித்து பேசினார். அவர் கூறியதாவது:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில், நம் அணி, பின்தங்கி இருந்தது. ஆனால், ராகுல் டிராவிட்டும், லஷ்மணும் சிறப்பாக ஆடி, ஆட்டத்தையே நம் பக்கம் திருப்பி விட்டனர். அதேபோல், அனில் கும்ப்ளே, காயத்துடன் சிறப்பாக பந்து வீசி சாதித்தார். இதுபோல, மாணவர்களும், எந்தவிதமான பின்னடைவை சந்தித்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், குறிக்கோளை அடைவதற்கு, கடுமையாக முயற்சிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

'இஸ்ரோ'வுக்கு சென்றது ஏன்?

பிரதமர் விளக்கம்பிரதமர் மோடி, மேலும் பேசியதாவது:
நிலவை ஆய்வு செய்வதற்காக, கடந்தாண்டு, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவின் விஞ்ஞானிகள், சந்திரயான் - 2 விண்கலத்தை ஏவினர். அது, நிலவில் இறங்கும் நாளன்று, நான், இஸ்ரோவுக்கு சென்றேன். 'வெற்றி உறுதி செய்யப்படாத நிலையில், அங்கு செல்ல வேண்டாம்' என, சிலர் என்னிடம் கூறினர். ஆனாலும், விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிப்பதற்காக அங்கு சென்றேன். திட்டம் தோல்வி அடைந்ததும், 'கவலை வேண்டாம்' என, விஞ்ஞானிகளுக்கு ஆறுதலும், தைரியமும் அளித்து விட்டு வந்தேன். இந்த நிகழ்வை, எப்போதும் மறக்க மாட்டேன். இதுபோல, மாணவர்களும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். தேர்வுகளின் போது, தைரியமாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.



IMG_20200121_100542



No comments