Breaking News

பட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா?.

பட்ஜெட்டில் பகுதிநேரஆசிரியர் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா?.

   ஒவ்வொரு முறையும் தமிழக அமைச்சரவை சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு கூடி முக்கிய முடிவுகளை எடுக்கிறது. இதில் தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகளை அரசு கொள்கை முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில் 10வது கல்வியாண்டு தொடங்க உள்ளதை முன்னிட்டு அரசின் கவனத்தை ஈர்க்க பணிநிரந்தரம் வேண்டி கருணை மனுக்களை அனுப்பி வரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து அரசு கொள்கை முடிவெடுத்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்படுமா என கோரிக்கை எழுந்து வருகிறது. 

   12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டி கவர்னர் முதல்வர் கல்விஅமைச்சருக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கருணை மனு அனுப்பி வருவதை அரசு கவனிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கடந்த 2012ல் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களில் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியிடங்கள் உருவாக்கி
நியமிக்கப்பட்டனர்.


    10வது கல்விஆண்டு ஜீன்-2020ல் தொடங்கவுள்ள நிலையில் இவர்களுக்கு
தற்போதுவரை ரூ.7 ஆயிரத்து 700 மட்டுமே தொகுப்பூதியமாக கிடைக்கிறது.
இவர்களில் மரணம், பணிஓய்வு, பணி ராஜினாமா என கிட்டதட்ட 5ஆயிரம்
காலியிடங்கள் ஏற்பட்டு 16549 பேரில் தற்போது 12ஆயிரம் பகுதிநேர
ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.  இந்த ஆசிரியர்களுக்குரிய ஊதியம் மற்றும் பணிசம்மந்தமான பிரச்சனைகள் இன்னும் சரிசெய்யமால் அரசு மெத்தனமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். முதல்வரின் 110 விதி அறிவிப்பின்படி மே மாதம் சம்பளம், பணிநியமன அரசாணை 177ன்படி 4 பள்ளிகளில் வேலை, இறந்தவர் குடும்பங்களுக்கும் மற்றும் 58 வயது பணிஓய்வில் சென்றவர்களுக்கும் ரூ.3லட்சம் குடும்பநலநிதி, மகளிர் ஆசிரியர்களுக்கு மகப்பேறுகாலவிடுப்பு, 7வது ஊதியக்குழு ஆணைப்படி 30சதவீத ஊதியஉயர்வு, பணிமாறுதல் போன்றவற்றை இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தாலும் அரசு மறுத்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
.

    இது தவிர, 2017ம் ஆண்டு ஜீன் ஜீலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில்
கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், மேலும் பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். ஆனால் 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை சட்டசபை அறிவிப்பை நிறைவேற்றாமல், கல்விஅமைச்சர் மறுத்துவருவது பணிநிரந்தரத்தை நம்பியிருந்த இவர்களுக்கு ஏமாற்றப்படுவதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்
தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் பின்னர் கல்வித்துறையில் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேரஎழுத்தர்கள் பின்னர் முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். பகுதிநேர கிராம முன்சீப், கர்ணம், மணியக்காரர்,
கிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் பின்னர் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
பகுதிநேரமாக செயல்பட்டுவந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தந்த துறைரீதியாக பணிநிரந்தரம் செய்ததைப்போல, தற்போது கல்வித்துறையில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களையும் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என மேற்கோள்காட்டி கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், சட்டசபைக்குழு தலைவர் உள்ளிட்டவர்களுக்கு தற்போது இவர்கள் மாநிலம் தழுவிய அளவில் கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர். மாணவர்கள் கல்விநலனுக்காக நியமிக்கப்பட்ட இந்த ஆசிரியர்களை தற்போதுள்ள வாரம் 3 அரைநாட்கள் வேலை என்பதை நீட்டித்து, ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்ய அரசு முன்வரவேண்டும் என்பதே இவர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.


  இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் இதுகுறித்து கூறியது, தமிழகத்தில் 2020 - 2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் நிதித்துறை அதிகாரிகள்
ஈடுபட்டுள்ளனர். இதில் மத்தியஅரசின் திட்ட வேலையில் இலவச மற்றும் கட்டாய கல்விக்காக தமிழகஅரசு பள்ளிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 12 ஆயிரம் உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட 8 பாடப் பகுதிநேர ஆசிரியர்களை ஊதிய உயர்வுடன் பணிநிரந்தரம் செய்வதற்கு இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி கருணைமனுவை பகுதிநேர ஆசிரியர்கள் கவர்னர், முதல்வர், துணைமுதல்வர், கல்விஅமைச்சர்,பணியாளர் நிருவாக சீர்திருத்த அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், ஊதிய குறை தீர்க்கும் குழு தலைவர்
மற்றும் சட்டசபை குழுதலைவர் என 10 பேருக்கு தமிழகம் முழுவதும் அனுப்பி வருகின்றனர். எனவே மனிதநேயத்துடன் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முன்னேற, கருணையுடன் இப்பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட தமிழகஅரசை வேண்டிக் கொள்வதாக கூறினார். 


  ஊரக உள்ளாட்சி துறையில் 3ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 16500 தொகுப்பூதிய துப்புரவு பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிநிரந்தரம் செய்து அரசாணை பிறப்பித்ததை போல, கல்வித்துறையில் ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்யவேண்டும். மேலும் 9 புதிய மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக அரசு உருவாக்குகிறது. இதற்கு புதிய கட்டிடம்,இதர கட்டமைப்பு, புதிய பணியாளர்கள் என ஆயிர கணக்கான கோடிகளை செலவு செய்கிறது. இதை போலவே அத்தியாவசிய செலவாக கருதி கல்வித்துறையில் பல ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12ஆயிரம் ஆசிரியர்களை தமிழக அரசு கூடுதலாக ஆண்டிற்கு 200 கோடி நிதி ஒதுக்கி பணிநிரந்தரம் செய்திட இந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்க படுமா என ஒரு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



No comments