Breaking News

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள?

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள?

கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் பிளஸ் டூ தேர்வுகள் முடிந்த கையோடு, தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பலகட்ட ஊரடங்குகள் இன்னும் முடிந்தபாடில்லை. சில மாதங்களாக தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்துவருகின்றன. சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. அதுபற்றி மத்திய, மாநில அரசுகளும் பேசிவருகின்றன. ஆகஸ்டு முதல் அக்டோபர் மாதங்களுக்குள் பள்ளிகளை எப்போது திறக்கலாம்? என்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்துக்களைக் கேட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை மத்திய மனிதவளத் துறைக்குத் தெரிவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தைப் போலவே தெலங்கானா மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கவில்லை. ஆந்திரத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதியும் கேரளத்தில் ஆகஸ்டு 31ம் தேதிக்குப் பின்னரும் கர்நாடகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குப் பிறகும் திறக்கலாம் என தற்காலிக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரையில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என சில ஆசிரியர்கள் கூறிய கருத்துகள்

                                                -கமலவள்ளி, இடைநிலை ஆசிரியர், வேதாரண்யம்

கிராமங்களில் நோய்த்தொற்று பயம் இருந்தாலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள். எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கமுடியும் என்று நினைக்கிறார்கள். வீட்டில் வைத்து குழந்தைகளை அவர்களால் பராமரிக்க முடியவில்லை. பள்ளிகள் திறந்தால் கவலையில்லை எனக் கருதுகிறார்கள். பள்ளிகளில் பிள்ளைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வசதியாக இருக்கும்.

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்தால் பள்ளிகளைத் திறக்கலாம். அப்படியே பள்ளிகளைத் திறந்தாலும் சமூக இடைவெளி, சானிட்டைசர், கை கழுவுதல் என பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவேண்டும். குழந்தைகள் கூடும் இடங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எனவே மற்ற வணிக நிறுவனங்களைத் திறந்த பிறகு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு யோசிக்கலாம்.

                                                                              - உமா, பட்டதாரி ஆசிரியர், சென்னை

தமிழகம் முழுவதும் ஒரே முடிவை எடுக்கமுடியாது. குறைவாக பாதிப்புள்ள கிராமங்களில் பள்ளிகளைத் திறக்க அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் முடிவெடுப்பது மாதிரி செய்யலாம். ஊர்களில் இருந்து மலைக்கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் செல்லமுடியாத நிலை இருக்கிறது. நோய்த்தொற்று ஏற்படும் என்ற பயம் காரணமாக உள்ளது.

உள்ளூரில் ஆசிரியர்கள் இருந்தால், மாணவர்களைச் சந்தித்துப் பேசலாம். மாணவர்களுக்கு வாசிப்புத் திறன் மற்றும் கணிதம் மறந்துபோயிருக்கும். அதை நினைவூட்டவேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாட்ஸ் ஆப் மூலம் பாடங்களை அனுப்பிவருகிறார்கள். என்னைக் கேட்டால் பாதுகாப்புக் காரணிகளுடன் விரைவில் பள்ளிகளைத் திறக்கலாம் என்றே சொல்வேன்.

                                      -விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், திருவண்ணாமலை

பள்ளிகளை செப்டம்பருக்குப் பிறகு திறக்கலாம். அதற்குள் ஓரளவுக்கு நோய்த்தொற்றும் குறைந்துவிடும் என நினைக்கிறேன். சமூக இடைவெளியுடன் எப்படி பள்ளிகளைத் திறப்பது, எத்தனை மாணவர்களைக் கொண்டு வகுப்புகளை நடத்துவது பற்றி திட்டமிட்ட பின்னர் பள்ளிகளைத் திறப்பது நல்லது.

வீட்டிலேயே மாணவர்கள் இருப்பதால், அவர்கள் படிப்பை மறந்துவிடும் நிலையும் இருக்கிறது. கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடப்பதால் நிலைமை பரவாயில்லை. பள்ளிகளில் சமூக இடைவெளி என்பது கவனமாகக் கையாளப்படவேண்டும். துள்ளித்துரிகிற பிள்ளைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருக்கப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம்.


No comments