Breaking News

பெண்கள் தொடர வேண்டிய ஏழு ட்விட்டர் பக்கங்கள்


       சமூக வலைதளங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உருவெடுத்து பிரபலமாகி வரும் காலம் இது. எதில் பார்த்தாலும் தகவல்களுக்கு பஞ்சமே இல்லை. “என்ன, நீ பேஸ்புக்-ல இல்லையா?”. “ட்விட்டர்-னா என்ன-னு தெரியாதா?” என்று நம்மை பார்த்து யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே எல்லா வலைதளங்களிலும் அக்கவுன்ட் தொடங்கிவிட்டு, சிறிது நாட்கள் அதையும் இதையும் பகிர்ந்துவிட்டு, பின்னர் அதை அனாதையாக விட்டுவிடுபவர்களும் உண்டு
      குறிப்பாக பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை தினசரி வேலைகளின் இடையே இரண்டாம் பட்சமாகவே உள்ளது. எனவே, ட்விட்டரில் நேரத்தை வீணடிக்காமல் நச்சென்று தகவல்கள் தெரிந்துக்கொள்ள பெண்கள் கண்டிப்பாக தொடர வேண்டிய ஏழு பக்கங்களை தேர்ந்தெடுத்து இதோ உங்களுக்காக தமிழ் யுவர்ஸ்டோரியில் பகிர்கிறோம்:

@ForbesWomen ( ஃபோர்ப்ச்வுமன்)

          சர்வதேச நாளிதழான ஃபோர்ப்ஸ், பெண்கள் குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும் பகிரும் பக்கம். உலக அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் பெண் தொழில்முனைவோர், பெரிய நிறுவனங்களில் மூத்த நிலைகளில் பணிபுரியும் பெண்கள் தரும் டிப்ஸ், பெண்கள் எவ்வாறு நிதி மேலாண்மை செய்யலாம் என பெண்களை ஊக்குவிக்கும் கட்டுரைகளை இந்த பக்கம் பகிர்கிறது. உங்கள் அறிவு மற்றும் தன்னம்பிக்கை டோஸ்-க்கு இந்த பக்கத்தை தொடரலாம்.

@GlobalfundWomen (குளோபல்ஃபண்ட்ஃபார்வுமன்)

            இன சமன்பாட்டிற்காக போராடும் சர்வதேச நிறுவனமான குளோபல் ஃபண்ட் ஃபார் வுமன்-இன் ட்விட்டர் பக்கம். சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான சட்டங்கள், சமூக அநீதிகள் குறித்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், மனித உரிமை தொடர்பான செய்திகள் என பல தகவல்களை பகிரும் பக்கம்.

@LeanInOrg (லீன்இன்ஆர்க்)

         ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.ஓ.ஓ ஷெரில் சென்ட்பெர்க் நிறுவிய லாபநோக்கற்ற நிறுவனம் லீன்இன் (டாட்) ஆர்க்.

பெண்கள் வாழ்க்கையில் சாதனைகள் புரிய வேண்டும், தங்களது கனவுகளை நிறைவேற்ற உழைக்கவேண்டும், அதற்கு ஆண்கள் எவ்வாறு உதவலாம் என்பது குறித்த அனுபவங்களையும், உண்மைக்கதைகளையும், கட்டுரைகளையும் பகிரும் பக்கம். 

இந்த கூட்டமைப்புக்கு ஒரு தனி இணையதளமும் (www.leanin.org) அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண்கள் பதிவு செய்து அதில் வெளியிடப்படும் தகவல்களை படித்து பலன் பெறலாம். 

@womensweb (வுமன்ஸ்வெப்)

                 வுமன்ஸ்வெப்.இன் (www.womensweb.in) என்ற பெண்களுக்கான இந்திய இணையதளத்தின் ட்விட்டர் பக்கம். பெண்களுக்காக பெண்கள் எழுதும் கட்டுரைகளை படிக்க இந்த பக்கத்தை தொடரலாம். பிசினஸ் செய்ய விரும்பும் பெண்கள், குழந்தை வளர்ப்பு குறித்த விஷயங்கள், பாலியல் தொடர்பான விவாதங்கள், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான டிப்ஸ் என இது போன்ற விஷயங்களை இங்கே படிக்கலாம். நீங்களும் எழுத விருப்பம் இருந்தால், அவர்களது இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். 

@Womenworking (வுமென்வொர்கிங்)

              பெண்களின் வாழ்வியல் முறை, வேலை, குடும்பம் சம்மந்தமான விஷயங்களையும், பல்வேறு துறைகளில், உலகின் பல்வேறு பகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பெண்களின் கதைகளை கட்டுரைகளாக வெளியிடும் நியூயார்க் நகரைச் சேர்ந்த இணைய நாளிதழின் ட்விட்டர் பக்கம். தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை பகிர்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி கொண்ட பெண்களுக்கான பக்கம். 

@SHEROESIndia (ஷீரோஸ்இந்தியா)

             பெண்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் ஷீரோஸ்இந்தியா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் இது. புதிதாக வேலை தேடும் பெண்கள், பகுதி நேர வேலை தேடும் பெண்கள், விருப்ப நேர வேலை தேடும் பெண்கள் என பெண்களுக்கான பணியிடங்களை பற்றிய அறிவிப்புகளை வெளியிடுகின்றது. அது மட்டுமில்லாமல் சிறந்து விளங்கும் இந்திய பெண்மணிகள், பெண் தொழில்முனைவோர் பற்றிய கட்டுரைகளையும் பகிரும் பக்கம். 

@womensleadership (வுமன்ஸ்லீடர்ஷிப்)

         ஒவ்வொரு நாளையும் தொடங்கும் முன் உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ள வழிகளை தேடுபவரா நீங்கள்? நெட்டில் கண்ட பழமொழிகளையும், புதுமொழிகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவரா? அப்போது நீங்கள் தொடர வேண்டிய பக்கம் இது. தன்னம்பிக்கை வாசகங்களை அவ்வப்போது பகிர்ந்து, பெண்கள் வாழ்க்கையில் முன்னேற உதவும் விஷயங்களை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு இது ஒரு எனெர்ஜி டோஸ் பக்கம் எனக் கூறலாம்.


இனி எதற்கு காத்திருக்கிறீர்கள்? தொடருங்கள், பகிருங்கள், பயன்பெறுங்கள்!

No comments