Breaking News

மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு மத்திய அரசு

மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு மத்திய அரசு
மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பதைத் தவிர்ப்பதற்காகவும், இந்தியாவிலேயே தங்கிப் படிப்பதை உறுதி செய்யவும் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. கரோனா சூழலில் மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவர்கள் வெளிநாடு செல்வதைத் தவிர்ப்பதற்காக சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இக்குழு அதிக அளவிலான மாணவர்கள் இந்தியாவிலேயே இருந்து படிப்பதை உறுதி செய்யும் வழிகளை அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

இந்தக் குழுவின் தலைவராக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் இருப்பார். உயர் கல்வியில் சரியான வாய்ப்புகளை இந்தியாவிலேயே ஏற்படுத்தித் தந்து, வெளிநாட்டுக்குச் செல்லும் கனவில் இருக்கும் மாணவர்களின் தேவைகளை இக்குழு நிவர்த்தி செய்யும். அதேபோல வெளிநாட்டில் இருந்து வரும் மாணவர்கள் தங்களின் படிப்பை முடிக்கவும் ஆதரவளிக்கும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், இந்தியாவில் தங்கி, இந்தியாவிலேயே படிப்பது (Stay in India and Study in India) என்ற பெயரில் கருத்தரங்கை இன்று நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தன்னாட்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரேவும் உடனிருந்தார். உயர் கல்வித்துறைச் செயலாளர் ஸ்ரீ அமித் கரே, யுஜிசி தலைவர் டி.பி. சிங், ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே, ஐசிசி இணைச் செயலாளர் நீதா பிரசாத் மற்றும் ஏஐயூ பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments