Breaking News

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடிய மவுசு தேதியை நீட்டிக்க மாணவர்கள் வேண்டுகோள்

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கூடிய மவுசு தேதியை நீட்டிக்க மாணவர்கள் வேண்டுகோள்
 தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். ஜூலை 20ஆம் தேதி இப்பணி தொடங்கிய நிலையில் 21ஆம் தேதி ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 22ஆம் தேதி 53 ஆயிரத்து 342 பேரும், 23ஆம் தேதி 34 ஆயிரத்து 924 பேரும், 24ஆம் தேதி 20 ஆயிரத்து 351 பேரும் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுவரை 2 லட்சத்து 09 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 உயர் கல்வியில் சேர சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மாணவர்கள் கால அவகாசம் கோரியிருந்த நிலையில் இதை ஏற்று ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மறுகூட்டலுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. 30ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பழைய மதிப்பெண்களை வைத்தே விண்ணப்பிக்க முடியும். ஏனெனில் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களின் தேர்வு முடிவு வர பத்து நாள்களுக்கு மேலாகும்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் தங்களுக்கு விரும்பிய பாடங்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதனால் இவர்களும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதியை மேலும் 15 நாள்கள் நீட்டிக்க வேண்டும் என மாணவர்களும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments