Breaking News

ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? 18 கோடி பான் கார்டுகள் செயலிழக்க வாய்ப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரைதான் கெடு

ஆதாருடன் இணைத்து விட்டீர்களா? 18 கோடி பான் கார்டுகள் செயலிழக்க வாய்ப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரைதான் கெடு
    பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது இறுதி கெடுவாக அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சுமார் 32.71 கோடி பான் எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு இந்த மாத துவக்கத்தில் தெரிவித்திருந்தது. இத்துடன் சேர்த்து கடந்த ஜூன் 29ம் தேதி வரை மொத்தம் 50.95 பான் கார்டுகள் உள்ளன. இதில், சுமார் 18 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இன்னும் இணைக்கப்படவில்லை. வரி ஆதாரங்களை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, தங்க நகைகள், மார்பிள் கற்கள், கல்விக் கட்டணம், ஓராண்டு மின்கட்டணம் போன்றவை ஒரு லட்ச ரூபாைய தாண்டினால் வருமான வரித்துறைக்கு தகவல் பகிர வேண்டும் என அறிவுறுதப்பட உள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சந்தேகத்துக்கு இடமான அதிக பரிவர்த்தனைகளை கண்காணிக்கவும், வரி ஏய்ப்பை தடுப்பது, வரி கணக்கு தாக்கல் செய்ய செய்வது போன்ற அனைத்துக்கும் பான் எண்தான் மிக முக்கியமானது. 50 கோடிக்கு மேல் பான் கார்டுகள் இருந்தும் 6.48 கோடி பேர்தான் கணக்கு தாக்கல் செய்கின்றனர்.

   இவர்களிலும் 1.5 கோடி பேர்தான் வருமான வரி செலுத்துகின்றனர். சுமார் 4.98 கோடி பேர் வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லை என கணக்கு காட்டுகின்றனர். அல்லது கணக்கு தாக்கல் செய்து, பிடித்தம் செய்யப்பட்ட வரி முழுவதையும் ரீபண்ட் வாங்கி விடுகின்றனர் என்றார். ஆனால், இவ்வளவு முறை அவகாசம் வழங்கியும் 18 கோடி பான் எண்கள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை. எனவே இவை செயலிழக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டில் இதுவரை 24.64 லட்சம் பேருக்கு 88,652 கோடி வரி ரீபண்ட்
நடப்பு ஆண்டில் இதுவரை 24.64 லட்சம் பேருக்கு மொத்தம், 88,652 கோடி வரி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய நேரடி வரிகள் ஆணையம், நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து இதுவரை 24.64 லட்சம் பேருக்கு வரி ரீபண்ட் வழங்கியுள்ளது. ரீபண்ட் தொகையாக மொத்தம் 88,652 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், 23,05,726 தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட 28,180 கோடி மற்றும் 1,58,280 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 60,472 கோடி ரீபண்ட் அடங்கும் என தெரிவித்துள்ளது.

No comments