Breaking News

இளையோரின் இதயத்தைப் பாதிக்கும் 7 விஷயங்கள்

இளையோரின் இதயத்தைப் பாதிக்கும் 7 விஷயங்கள்
முதியவர்களை மட்டுமே குறி வைத்த மாரடைப்பு, இன்று இளைய தலைமுறையினரையும் விட்டு வைப்பதில்லை. எங்கும் எதிலும் பரபரப்பு நிறைந்த வாழ்க்கை முறை மரணத்தையும் வேகமாகப் பரிசளிக்கிறது என்பது மிகப்பெரிய வேதனை. உலக அளவில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், மேற்கத்திய நாடுகளை விட இந்தியாவில் மாரடைப்புக்கு உள்ளாகும் இளைஞர்களின் எண்ணிக்கை 3 முதல் 4 மடங்கு அதிகமுள்ளதாகக் கூறுகின்றன. உலகின் சராசரி அளவை விட 15 முதல் 18 சதவீதம் வரை இந்த விகிதம் அதிகமாக இருக்கிறது.

இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது முதுமையினால் வருவது. இதற்கான அறிகுறிகளும் முன்கூட்டியே தெரியும் சூழல் நிகழும். இதற்கு மாறாக, இளம் ரத்தம் உருண்டோடும் இளைய தலைமுறையின் ரத்த நாளங்களிலும் அடைப்பு உருவாகிறது என்பது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த 7 விஷயங்கள்!

அதிகமான பணிச்சூழல், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, தேவையற்ற பழக்க வழக்கங்கள், இது போதாதென்று டயட் என்ற பெயரில் உணவைப் புறக்கணித்தல் போன்றவை இந்த பெரும் ஆபத்தில் கொண்டுபோய் நிறுத்துகின்றன. இதற்குக் காரணமான 7 விஷயங்களில் முதன்மையானது ‘அழுத்தம்’. உலகமயமாக்கல் தந்த பரிசுகளில் ஒன்று இது. வேலை மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளாலும் ஹார்மோன் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றால் ஏற்படும் மன அழுத்தம் தொடர்ச்சியாகும்போது இதயம் பாதிப்பை எதிர்கொள்கிறது.

உப்பும் சர்க்கரையும்..

துரித உணவகங்கள் பெருக்கத்தால், அளவுக்கு அதிகமாகவே உப்பு நம் உணவில் கலந்து வருகிறது. சோடியம் குளோரைடு, அயோடின் போன்றவை மட்டுமே நம் கைக்கு அருகில் இருந்த நிலை மாறி, வெவ்வேறு வேதிப்பொருட்கள் உணவில் கலக்கும் நிலை உள்ளது. அதிக உப்பு, மசாலா நிறைந்த அசைவ உணவுகள் நாக்கில் மட்டுமே சுவையைத் தருகின்றன. மாறாக, அது உணவு மண்டலத்துக்குள் சென்றபிறகு பெரும் கெடுதலை ஏற்படுத்துகின்றன. இந்த சுவைக்கு அடிமையான பிறகு, ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் உப்பு போதுமென்ற கட்டுப்பாடு காற்றில் பறந்து விடுகிறது. மூன்று பேரில் ஒருவருக்கு சர்க்கரை குறைபாடு ஏற்படும் சூழல், விரைவில் உலகம் முழுவதும் நிகழும் என்கின்றனர் நிபுணர்கள். சர்க்கரை நோயால் இதய பாதிப்புகள் அதிகமாகும் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

உயிரைக் கொல்லும் மது, சிகரெட்

புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும் என்ற வாசகம் திரைப்படங்களில் இடம்பிடிக்கத் தொடங்கி நீண்ட நாட்களாகி விட்டன. ஆனால், புகை பிடிப்போரின் எண்ணிக்கையில் இது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. சிகரெட்டில் இருக்கும் நிகோடின், ரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் எகிற வைக்கிறது. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஆத்ரோஸ்க்ளோரோசிஸ் எனும் பாதிப்பு ஏற்படுகிறது. மது அருந்தும் வழக்கம் தொற்றியபிறகு ‘ஸ்மால்’ என்ற வார்த்தைக்கே இடமில்லை. விளைவு, இப்பழக்கத்தினால் உடலில் கொழுப்பு அதிகம் தேங்குகிறது. அதுவே இதய நோய்களுக்கும் பாதை அமைக்கிறது.

சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை

உடல் உழைப்பு சிறிதும் தேவைப்படாத வாழ்க்கைச் சூழலுக்குள் பொருந்திக்கொள்ளும் மனிதர்கள் அதிகமாகி வருகின்றனர். கொழுப்பை உட்கொள்வது அதிகமான அளவுக்கு, அதனை கலோரிகளாக கரைக்கும் மனப்பான்மை பெருகவில்லை. குறைந்தபட்சமாக ஒரு மனிதர் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். இதில் குறைபாடு ஏற்பட்டால் ஹார்மோன் சமச்சீர் கெட்டுவிடும் என்கின்றனர் இதய நிபுணர்கள். ஆர்டர் செய்து சாப்பிடுவது என்றான பிறகு, உடல் உழைப்பை வேறு வகையில் எதிர்பார்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது. இதனால் தூக்கமும் சீர்கெட்டு விட்டது. இந்த 7 விஷயங்களும் தற்போது இளையோரிடம் அதிகம் காணப்படுகின்றன. அதனாலேயே இதய பாதிப்புகளும் அவர்களிடையே அதிகரித்து வருகின்றன. ஒருவரது இதயம் தினமும் ஒரு லட்சத்து பத்தாயிரம் முறையாவது துடிக்கிறது. அது ஒரு அதிசயம் என்று உணர்ந்தாவது, அதனைப் பாதுகாக்கும் வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.

No comments