Breaking News

தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது

      வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறக்கலாம். அண்டை மாநிலங்களில் என்ன நிலை உள்ளது? என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு செய்வது அவசியம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

     அப்போது தமிழக அரசு வக்கீல் ஆஜராகி, “பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோரின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க வேண்டாம் என்று தெரிவித்து வருகின்றனர்” என தெரிவித்தார். இந்த நிலையில் அரசு தனது உத்தரவை ரத்து செய்து அறிவித்துள்ளது.

     தமிழகத்தில் நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் 6 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் செயல்படவில்லை. நவம்பர் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்தது.  பள்ளிகளை  இப்போது திறக்க கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் என பல துறைகளை சார்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து 12 ஆயிரத்து 700 பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தபோது பெரும்பான்மையான பெற்றோர் பள்ளி திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக்காட்டி அச்சம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நேற்று கொரோனா 2ம் அலை பரவ வாய்ப்புள்ளதால் டிசம்பர் வரை பள்ளி திறப்பை தள்ளிவைக்கலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்தது. இந்நிலையில் நீதிமன்றமும் தள்ளிவைக்க யோசனை தெரிவித்துள்ளதால், ஜனவரி மாதம் பள்ளிகளை திறக்கலாம் என்று  தமிழக அரசு ஆலோசித்து வந்த நிலையில் நவ 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

    அதேபோல், கல்லூரிகளை 16.11.2020 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன்படியும், 5.11.2020 அன்று வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியும், அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி / பல்கலைக்கழகங்களை 2.12.2020 முதல் திறக்க உத்தரவிடப்படுகிறது. மேலும், இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2.12.2020 அன்று திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டும் மாணவர்களுக்கான விடுதிகள் திறக்கப்படும். 

   கல்லூரிகள் மற்றும் விடுதிகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்படும். பிற மாணவர்களுக்கு ஏற்கனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடர்ந்து நடைபெறும். கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க பொதுமக்கள் எனவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.




No comments