Breaking News

மழைக்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

மழைக்காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
    மழைக்காலம் ஆரம்பித்துவிட்டதால், பலத்த மழையும், சாரலான மழையும் ஆங்காங்கு பெய்து கொண்டு வருகிறது. இத்தகைய காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.

மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் :

மழைக்காலங்களில் வீட்டுக்கு வெளியே இருக்கும்போது மின்னல் மின்னினால் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.

அருகில் கட்டிடங்கள் எதுவும் இல்லாவிட்டால் பள்ளமான இடம், அகழி, குகை போன்ற இடத்திற்கு பத்திரமாக சென்றுவிட வேண்டும்.

இடி, மின்னல் ஏற்படும்போது மரத்திற்கு அடியில் நிற்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் உயரமான மரங்களை மின்னல் எளிதாக தாக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

மின்சாரம் கடத்தும் பொருட்களிடமிருந்தும் தள்ளி இருக்க வேண்டும்.

நெருப்பு இருக்கும் இடங்கள், ரேடியேட்டர்கள், அடுப்பு, உலோக பொருட்கள் மற்றும் தொலைப்பேசிகள் ஆகியவற்றில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

நீரினுள் இருந்தால் அந்நீர்நிலையினை விட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

படகு மற்றும் ஓடம் போன்றவற்றில் நீர்நிலைகளில் பயணித்து கொண்டிருந்தால் உடனே கரை திரும்ப வேண்டும்.

கால்நடைகளை இடிதாங்கி பொருத்திய பாதுகாப்பான இடத்தில் இருக்க செய்வதன் மூலம் மின்னல் தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியும்.

இடி, மின்னல் ஏற்படும்போது மின்கம்பங்கள், மரங்கள், மின்கம்பிகள் ஆகியவற்றின் கீழே நிற்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும், மழைக்காலத்தில் பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், நாம் புகார் எண்களை தெரிந்து வைத்திருப்பது மிக அவசியம்.

இடி, மின்னலின் போது மொபைல் போனை சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மற்றவரிடம் போனில் உரையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.

பெற்றோர்களின் கவனத்திற்கு :

குழந்தைகளிடம் மின் கம்பம், மரத்தடியில் நிற்கக்கூடாது என்பதை கூறுங்கள்.

சாலை, சாலையோரங்களில் வேகமாக நீர் ஓடினால் கடக்க வேண்டாம் என்று கூறுங்கள்.

இடி, மின்னலுடன் மழை பெய்யும்போது குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு :

மழைக்காலத்தில் மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும்.

மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும்.

குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம்.

மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம்.

மழை, புயல் காற்றால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக்கூடாது. இதுகுறித்து, மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும்.

சாலைகளில் அதிகமாக நீர் தேங்கி இருந்தால் சாலையை கடப்பதை தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நம்மை பாதுகாத்து கொள்ள எளிமையாக இருக்கும்.

No comments