பொதுதேர்வில் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டும் அமர வைக்க முடிவு
பொதுதேர்வில் ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டும் அமர வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய தேர்வு மையங்களுக்கான பட்டியல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. தொற்று குறைந்துள்ளதால், முதற்கட்டமாக 10, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
தொடர்ந்து வரும் 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 25 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியுடன் அமர வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான பணிகளில் பள்ளி கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தேர்வு மையங்களில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு பதிலாக 10 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.