Breaking News

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய முதல்வர் உத்தரவு

 செ.கு. எண் : 25 நாள் : 01.02.2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . எடப்பாடி K பழனிசாமி அவர்களின் அறிக்கை - 1.2.2021 

      மத்திய அரசு 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கி ஆணையிட்டவுடன் , இந்தியாவிலேயே முதல் மாநிலமாக , தமிழ்நாட்டிலும் ஊதியக்குழுவை அமைத்து , அதன் பரிந்துரைகளை உரிய காலத்திலேயே பெற்று , ஒரே மாதத்தில் அதனை பரிசீலித்து , மாநில அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வையும் வழங்கி ஆணையிட்டது . அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு என்றுமே புறந்தள்ளியது இல்லை . 



    மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை அவ்வப்போது சந்தித்து வந்த போதிலும் , மக்களுக்கான பணியை அரசு ஊழியர்கள் ஊக்கமுடன் செய்ய வேண்டுமென கருதிதான் , அவ்வப்போது ஊதிய உயர்வு , அகவிலைப்படி போன்றவற்றை உடனுக்குடன் வழங்கி வருகிறது . 

    கொரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் கூட சில மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்தது | நிறுத்தி வைத்தது . ஆனால் , தமிழ்நாடு அரசு அந்த கடுமையான நிதி நெருக்கடியிலும் எந்த அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்தையோ , அகவிலைப்படியையோ குறைக்கவில்லை . எந்த தாமதமும் இன்றி வழங்கியது . 

   இந்த முயற்சிகள் எல்லாம் , அரசு ஊழியர்கள் கட்டுப்பாட்டோடு செயல்படுவது மக்களின் நலனுக்கு அவசியம் என்பதாலும் , அத்தகைய அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ஊக்கமுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதால்தான் . இந்நிலையில் , அடிக்கடி போராட்டத்தில் ஈடுபடுவது போன்றவை நிர்வாக கட்டுப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பதுடன் , மக்கள் பணிக்கும் பாதகம் ஏற்படுத்தும் என்பதை நன்கு உணர்ந்துதான் , இத்தகைய போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு கோரி வருகிறது . 

    எனினும் , அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்கள் , ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி ஊதியத்திற்குரிய 21 மாதகால நிலுவைத் தொகை வழங்க வேண்டும் , புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் , சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் , பணியாளர் பகுப்பாய்வு குழுவினை அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை புதிய 2 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்து வந்தனர் . அவற்றுள் , சில பணியாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து , அத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 

    இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது . இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக , மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் , மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் , நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது . அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக , 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இது தவிர , சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன . பின்னர் , அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர் . அதே போன்று , 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு , பின்னர் மீளப் பணியார்த்தப்பட்டனர் . 

  மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது , போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது . இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து , நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . 

       இந்நிலையில் , அரசு ஊழியர்களும் , ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு , மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன் . இதனையடுத்து , வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் , தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 30.12019 அன்று அறிவித்து , உடனடியாக பணிக்கு திரும்பினர் . அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும் , வழக்குகளையும் திரும்ப பெற , அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் 3 நேரில் கோரிக்கை வைத்திருந்தனர் . 

       இன்று ( 1.2.2021 ) , தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் , மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து , மேற்கூறிய தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர் . மாண்புமிகு அமைச்சர் அவர்களும் , இது குறித்து எனது கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள் . இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து , மறப்போம் , மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு , வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு , நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் மாண்புமிகு அம்மாவின் அரசு கைவிடுகிறது . 

     அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று , அரசு வாழியர்களும் ஆசிரியர்களும் , மேலும் ஊக்கமுடனும் , ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

 K. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர் 

வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9