Breaking News

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்: இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு


தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. உயிரியல், தாவரவியல் பூங்காக்கள் திறக்கப்படுவதுடன் கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகள் இரவு 10 மணி வரை செயல்படவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இன்று (ஆக.23) முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திரையரங்க பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறுவியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இனி இரவு 10 மணி வரை செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொதுப் பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுப் பயிற்சிகளுக்காக மட்டும் நீச்சல் குளங்கள் 50 சதவிகித பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுக்கூடங்கள் செயல்படவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிகள் அனைத்தும் இன்று அமலாகின்றன.