Breaking News

TRB, TNPSC - மதிப்பெண் அடிப்படையில் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு: தீர்ப்பை மீண்டும் உறுதிபடுத்தியது சுப்ரீம்கோர்ட்

TRB, TNPSC - மதிப்பெண் அடிப்படையில் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு: தீர்ப்பை மீண்டும் உறுதிபடுத்தியது சுப்ரீம்கோர்ட்
மதிப்பெண் அடிப்படையில்தான் அரசு ஊழியருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்றும் உறுதி செய்தது. டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழக அரசு கடந்த 2003ம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. பின்னர். கடந்த 2016ம் ஆண்டு புதியதாக சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமேயன்றி, இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’ என்று கடந்த 2019ல் தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர், உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ‘ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். ஏற்கனவே வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றுமின்றி, இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் உச்சநீதிமன்றம் ஒரே தீர்வைதான் வழங்கியுள்ளது. எனவே, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வரும் 12 வாரத்தில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

No comments