Breaking News

மற்ற பல்கலைக்கழகங்களை போன்று கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் மறுமதிப்பீடு முறை அமல்படுத்தப்படும்

      ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வில் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் 700 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளை நடத்துகின்றன. இந்த படிப்புகளுக்கான தேர்வை ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்துகிறது. தேர்வில் விடைத்தாள் திருத்தம் சான்றிதழ் வழங்குதல் பட்டம் வழங்குதல் உள்ளிட்டவற்றையும் கல்வியியல் பல்கலை மேற்கொள்கிறது. இந்த பல்கலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை விடைத்தாளுக்கான மறு மதிப்பீடு மறு கூட்டல் முறை அமலில் இல்லை.



       சமீபத்தில் கல்வியியல் படிப்புகளுக்கான தேர்வு முடிவு வந்த போது பல மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என இணையதள முடிவில் குறிப்பிட்டப் பட்டிருந்தது. இதுகுறித்து கல்லுாரிகள் மற்றும் மாணவர்கள் தரப்பில் பல்கலைக்கு புகார் அளிக்கப்பட்டது. பல்கலை நிர்வாகம் செய்த ஆய்வில் தொழில்நுட்ப காரணங்களால் தேர்வு முடிவில் குழப்பம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நிலைமையை சமாளிக்க மறு மதிப்பீடு முறை அறிவிக்கப்பட்டு மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு சரியான மதிப்பெண் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மற்ற பல்கலைகளை போல கல்வியியல் பல்கலையிலும் நிரந்தரமாக மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முறை அமல்படுத்தப்படும். முதல் கட்டமாக எம்.எட். படிக்கும் மாணவர்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.





No comments