Breaking News

வருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதியுடன் முடிகிறது

      வருமான வரித்துறை எச்சரிக்கை பான் - ஆதார் இணைக்க கெடு 31ம் தேதி முடிகிறது. பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கெடு, இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பான் - ஆதார் இணைப்பு கட்டாயம் என, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியது. எனவே, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், தங்களது பான் எண்ணை ஆதாருடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.

        இதுபோல், புதிய பான் எண் விண்ணப்பிக்க ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்த உத்தரவால் போலியான பான் எண்கள் ஒழிக்கப்பட்டன. இந்த இணைப்புக்கான கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டு வந்தது. இதற்கு முன்பு செப்டம்பர் 30ம் தேதி கடைசி தேதி என இருந்தது. பின்னர் இந்த மாதம் 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதோடு, இதுவே இறுதி கெடு என மத்திய நேரடி வரிகள் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
        இதன்படி கெடு தேதி முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளன. இதை நினைவூட்டும் வகையில், வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை தகவல் அனுப்பியுள்ளது. அதில், ‘வருமான வரி பலன்களை எளிதாக பெற இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் வருமான வரி இணையதளத்துக்கு சென்று அதில் லிங்க் ஆதார் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் பான் எண், ஆதார் எண், ஆதாரில் உள்ளபடி பெயர் விவரம், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து எளிதாக இணைக்கலாம்.


No comments