Breaking News

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

     5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர்கள் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு ஆசிரியர்கள் திருப்பி அளிப்பதுதான் அவர்களது கடமை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து தற்போது வரைபடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முழு விபரம் வரவில்லை. வந்தால் தான் அது குறித்து ஆய்வு செய்யமுடியும். 5 மற்றும் 8 -ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது எதிர் கட்சிகள் போராட்டம் நடத்தியதற்கு கிடைத்த வெற்றி என்பதெல்லாம் தவறான செய்தி.

       மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும் தருமளவிற்கு மீண்டும் பயிற்சி அளித்து பரிசீலனை செய்யலாம் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு பயிற்சி தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. நீட்தேர்வு விலக்கு கோராமல் பயிற்சி அளிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். நீட்தேர்வு வருவதற்கு கையெழுத்திட்டது காங்கிரஸ் அரசு தான். அவர்கள் தான் நீட்தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இடையில் நாங்கள் மாட்டிக்கொண்டுள்ளோம்.

     தமிழக முதல்வர், பிரதமர், மற்றும் குடியரசு தலைவரை சந்திக்கின்ற போதெல்லாம் நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அரசு பள்ளிகளில் இந்தி விருப்ப பாடமாக வேண்டும் என ஒருசில ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளது. ஆசிரியர்கள் இருக்கின்ற பாடத்தை ஒழுங்காக சொல்லிக் கொடுத்தாலே போதும். இவ்வாறு அவர் கூறினார்.

   5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என்று பதில் அளித்தார்.

No comments