Breaking News

ஜூலை 31 வரை இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன?

ஜூலை 31 வரை இந்தியாவில் கொரோனா பொது முடக்கம் நீட்டிப்பு - தளர்வுகள் என்னென்ன?

 இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் நாளையுடன் (ஜூன் 30) முடிவுக்கு வரவுள்ள நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  ஜூன் 1ஆம் தேதி முதல் இதுவரை அமலில் உள்ள பொது முடக்கத்தை ‘அன்லாக் 1’ என்று குறிப்பிட்டு வரும் அரசு தற்போது ‘அன்லாக் 2’ என்ற பெயரில் வெளியிட்டுள்ள இந்த வழிகாட்டுதலின் முக்கிய தகவல்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

  மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் அல்லாத இடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள உள்நாட்டு விமானசேவை படிப்படியாக தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும்.

   இரவு நேர ஊரடங்கு இனி இரவு 10 மணிமுதல் அதிகாலை ஐந்து மணிவரை மட்டுமே அமலில் இருக்கும்.

 கடைகளின் அளவை பொறுத்து ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடலாம். ஆனால், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.

 நாடு முழுவதுமுள்ள பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் உள்ளிட்டவை ஜூலை 31ஆம் தேதிவரை மூடப்பட்டிருக்கும்.

  வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சர்வதேச விமானப்போக்குவரத்து இயங்கி வரும்கிறது. தேவைக்கேற்றவாறு அது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

 திரை அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான விடுதிகள் ஆகியவை செயல்படுவதற்கான தடை தொடருகிறது.

 சமூக, அரசியல், விளையாட்டு, பொழுது போக்கு, கல்வி, கலாசார, மதரீதியிலானவை உள்ளிட்ட அதிக கூட்டம் கூடும் நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கிறது.

  நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொது முடக்கம் ஜூலை 31ஆம் தேதி வரை கடுமையாக அமல்படுத்தப்படும்.

  நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் அனுமதிக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

   மாநில அரசுகள் சூழ்நிலையை பொறுத்து நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களிலும் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கான தடையை விதிக்கலாம். எனினும், மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் மாநிலத்திற்கு உள்ளான நபர்கள் மற்றும் பொருட்களுக்கான இயக்கத்தில் எவ்வித தடையும் விதிக்கப்படக் கூடாது.

    மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தனிப்பட்ட அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

  பாதிக்கப்படக்கூடிய நபர்கள், அதாவது, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்ற நபர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், அத்தியாவசிய மற்றும் சுகாதார தேவைகளைத் தவிர, வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.

No comments