Breaking News

தமிழ் மொழியில் 'ழ' என்ற எழுத்தின் சிறப்புகள்

தமிழ் மொழியில் 'ழ' என்ற எழுத்தின் சிறப்புகள்

உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள் இல்லை.

என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெயர். நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.



ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ? 

தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.



எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும், ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் க,ச,ட,த,ப எல்லாம் நான்கு நான்காக உள்ளன. இதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை தமிழில் எழுதும் போது பெண், ஃபெண் என்று நாமும் எதையாவது முயன்று பார்க்கிறோம். இவைகளை இலக்கணம் ஒத்துக் கொள்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கில மொழி தமிழுடன் கலந்த காலத்திற்கு பிறகு எந்த தமிழ் இலக்கண மரபும் மாற்றியமைக்கப்படவில்லை என்பது உண்மை. நமக்கும் முன் நிறைய தமிழறிஞர்கள் தனித்தமிழ் பற்றியெல்லாம் யோசனை செய்து உள்ளார்கள். அவர்களின் நிலைப்பாட்டுடன் நமது மொழியை மாற்றியமைக்க எவரும் துணியவில்லை.

மீண்டும் தொடங்கிட இடத்திற்கே வருவோம். உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. ஆங்கிலத்தில் தமிழ் என்ற பெயர்சொல்லை Tamiழ் என்றா எழுதுகிறோம்?. இல்லையே Tamil, Thamil, Thamizh என்று எப்படி எப்படியோ எழுதிவிடுகிறோம். விக்கிப்பீடியா தமிழை ஆங்கிலத்தில் உச்சரிக்க [t̪ɐmɨɻ] என்று உச்சரிப்பு முறையை சொல்லிதருகிறது. குறியீடுகளின் மூலம் எழுத்துகளின் ஒலியமைப்பினை மாற்றி உச்சரிக்க மற்ற மொழியில் வழி செய்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருந்தும், தமிழர்கள் இருந்தும், 247 எழுத்துகள் இருந்தும் இன்று கூட நம் அண்டை மொழிகளிடம் எழுத்துகளை கடன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது வெட்கமானது இல்லையா?. தமிழின் தலைவர்கள் இத்தனை பேர் இருந்தும், உலகின் அறிவான இனம் என்ற பெருமை இருந்தும், இது இகழ்வானது இல்லையா?. மேலும் மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது என்கிறது விக்கிப்பீடியா. சரியான புரிதல்கள் இன்றி தமிழை ஆதிகாலத்தின் நிலையிலேயே நாம் வைத்திருக்க முடியாது. வழக்கொழிந்து செல்லாமல் இருக்க பிற மொழியின் எழுத்துகளை தமிழில் பயன்படுத்துவதையும் ஏற்கமுடியாது. 

No comments