Breaking News

பள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு

பள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு
‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து 15 நாட்களுக்குள் மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை கடந்த மார்ச் 16ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக மாநில அரசுகள் அறிவித்தன. இதைத் தொடர்ந்து, பத்தாம் வகுப்பு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அரையாண்டு மற்றும் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. நிலுவையில் இருந்த பிளஸ் 1 தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.
அதே நேரம், கல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று பல்கலை மானியக் குழு அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், முதல், இரண்டாம் ஆண்டு தேர்வுகளை மட்டும் ரத்து செய்து, இறுதியாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். இல்லையெனில் சான்றிதழ் வழங்கப்படாது என்று பல்கலை மானியக் குழு கண்டிப்புடன் தெரிவித்தது.

இதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வுகளை நடத்த அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், நாட்டில் நிலவும் கொரோனா பரவலின் சூழ்நிலையை பொருத்தும், தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளை செப்டம்பரில் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது,’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று சூழலைப் பொருத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. தற்போதைய சூழலில், சண்டிகர் யூனியன் பிரதேச அரசு மட்டுமே பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளது. எனவே, பள்ளிகள் திறப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் இன்னும் 15 நாட்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்த எந்தவொரு முடிவாக இருந்தாலும், அது மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும். கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் கல்வியாண்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஆன்லைன் கல்வி ஆகியவை குறித்து ஆராய பல்கலை மானிய குழு இரண்டு கமிட்டிகளை உருவாக்கி உள்ளது. இந்த கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில், `பள்ளி, கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டை செப்டம்பர் மாதத்தில் இருந்து துவக்கலாம்,’ என்று பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* மாணவர்கள் பாதுகாப்பே முக்கியம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று அளித்த பேட்டியில், ``ஊரடங்கு காரணமாக பள்ளிகளை திறக்க தாமதமானாலும், மாணவர்களுக்கு எவ்வித கல்வி இழப்பும் ஏற்படாது. இந்தியாவில் மொத்தம் 34 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். மாணவர்கள் இந்தியாவின் மிகப் பெரிய சொத்துக்கள். எனவே, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. ஆகவே தான், 3ம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டுதல் விதிமுறைகளில் பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது,’’ என்றார்.

No comments