Breaking News

தொடரட்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு - நீட் வேண்டாம்

தொடரட்டும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு - நீட் வேண்டாம்
இந்திய ஒன்றிய அரசு அளவிலான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் கல்வி உரிமைகளில் மாநில சுயாட்சி அதிகாரத்தை நசுக்கும் வகையில் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (NATIONAL ELIGIBILITY AND ENTRANCE TEST) முறை குறித்து தமிழ்நாட்டில் பல்வேறு அதிருப்தி நிலவி வருகிறது. அதற்கு முன்புவரை இங்கு மேனிலைக்கல்வி இரண்டாம் ஆண்டு (+2) மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன், மாநில கல்வி பாடத்திட்டத்தையொட்டி பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அளவில் பொது நுழைவுத்தேர்வு நடைமுறை இருந்துள்ளது. காலப்போக்கில் இதுபோன்ற நுழைவுத்தேர்வுகளில் காணப்படும் குறைபாடுகளைக் களையும் நோக்கில் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை என்பது ஓரளவிற்கு உறுதியானது.

இந்த காலகட்டத்தில் புற்றீசல்கள் போல் மாநிலம் எங்கும் வெடித்துப் பரவிய தனியார் பள்ளிகள் பலவும் கல்வியின் அடிப்படை குறிக்கோள்களைப் புறந்தள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் எந்திரங்களாக உருமாற்றத் தொடங்கின. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிப்பதாக இருந்தது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மேனிலைக்கல்வி முதலாமாண்டு (+1) வகுப்பும் அதற்குரிய தேர்வும் நடத்தப்பெறுவதே இல்லை. ஓராண்டு +2 கல்வியை ஈராண்டுகள் படிக்க மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தயார்படுத்தப்பட்டனர். இப்பள்ளிகள் பலவும் பெற்றோர்கள் விருப்பங்களின் அடிப்படையில் செயல்படும் நவீன ஹிட்லர் வதை முகாம்களாகக் காட்சியளிப்பதை மாணவர் உளவியல் வல்லுநர்கள் விரும்பவில்லை. இதில் பெரிய கொடுமை யாதெனில், காலப்போக்கில் அரசுப் பள்ளிகளும் வேறுவழியின்றி இத்தகைய நோக்கையும் போக்கையும் கையிலெடுத்துச் செயல்படத் தொடங்கின.

ஒன்றிய அரசின் நீட் (NEET) தேர்வு நடைமுறைகள் வெளிப்பார்வைக்கு ஆகச் சிறந்த ஒன்றாகத் தெரிந்தாலும் அதன் புறவயத்தன்மை மிகுந்த கேள்விக்குறி ஆகியுள்ளது. தேர்வுகளில் பூடகத்தன்மை, மத்திய கல்வி வாரிய பாடத்திட்டம் (CBSC), ஆள்மாறாட்டம், மதிப்பெண்களில் வெளிப்படைத்தன்மையின்மை, முறையான பயிற்சியும் வழிகாட்டலும் கிடைக்கப்பெறாமை முதலான குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் மலிந்து காணப்படுவது உள்நோக்கம் கொண்டவையாக இருக்கின்றன என்பதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டி வருவது அறிந்ததே.

மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் கோலோச்சும் தமிழ்நாட்டு மாணவர்களின் தேசிய அளவிலான நீட் தேர்வு பங்களிப்புகள் சொற்ப அளவில் சுருங்கிப்போனது சாபக்கேடு. இங்குள்ள. CBSC மாணவர்களே அதிகம் தேறி வந்துள்ளதாகவும் அவர்களுக்கு இணையாக குறிப்பிடத்தக்க தனியார் பள்ளிகளின் பல்வேறு தொடர்பயிற்சிகளால் ஓரளவு வெற்றி இலக்கை அடைவதாகவும் குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைந்துள்ளதாகவும் அறியப்படுகிறது.

கடந்த காலங்களிலாவது வதை முகாம்களிலிருந்து புடம் போட்டு வெளியே வரும் தனியார் மதிப்பெண் எந்திர உயிரிகளிடம் ஓரளவிற்கு போட்டி போட்டு மருத்துவக் கல்வி இடங்களில் அமர்ந்து வந்த அரசுப்பள்ளி மாணவர்களின் நிலை நீட் தேர்விற்கு பின்னர் மிகவும் பரிதாபகரமான ஒன்றாகிப்போனது. சிலரது துர்மரணங்கள் மாணவரிடையே மருத்துவர் கனவைச் சிதைத்தது. வறட்டு வீண் பிடிவாதம் கொண்ட பெற்றோர்கள் பலரும் தம் பிள்ளைகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எட்டா உயரத்திற்குப் போய்விட்ட மருத்துவக் கல்வியை மீளவும் தமக்குள்ளாக சொல்லொணா கண்ணீருடன் புதைத்துக் கொண்டு வேறு சில புதிய படிப்புகளின் மீது பார்வையைத் திருப்பி வடிகால் தேடும் படலம் நிகழ்ந்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

இவற்றைக் கருத்தில் கொண்டே, கடந்த ஆண்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறும்
அரசுப்பள்ளி மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 விழுக்காடு சலுகை அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குறைந்த பட்ச மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றும் போதிய அதிக மதிப்பெண்கள் எடுக்கப்பெறாத காரணத்தாலேயே மருத்துவப் படிப்பு வாய்ப்பைப் பறிகொடுத்தோர் மேற்குறிப்பிடப்பட்ட சலுகை மூலம் தகுதி பெற்றனர். தற்போது வளர்ந்து வரும் நவீன சமூகத்தில் பெற்றோரிடையே மலிந்து காணப்படும் அரசுப்பள்ளிகள் மீதான தீண்டத்தகாத அருவருக்கத்தக்க புறந்தள்ளும் வெறுப்புணர்வுகள் அரசின் இந்த புதிய இட ஒதுக்கீடு அறிவிப்பால் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.

எனினும், தமிழ்நாட்டின் பொது மனநிலை நீட் தேர்வு கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. அண்மையில் தமிழ்நாட்டில் உதித்துள்ள புதிய ஆட்சியின் எண்ணமும் பொதுமக்களின் நீட் தேர்வு எதிர்ப்புக் குரலுக்கு அரணாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஒன்றிய அரசிடம் ஓயாமல் முன்வைக்கும் கோரிக்கையாகவும் இஃதே உள்ளது. அதேவேளையில், அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவினை தொடர்ந்து நனவாக்கும் பொருட்டு நீட் தேர்வு ஒழிக்கப்பட்ட நிலையிலும் முன்னுரிமைக்கான சலுகை இதே 7.5% அளவிலும் இதற்குக் கூடுதலாகவும் உறுதியளிக்க வேண்டியதும் மக்களின் மனம் கவர்ந்த நல்லரசின் கடமையாகும்.

No comments