பள்ளிகள் திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலின் 2-வது அலையால் நடப்பாண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டது. கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சூழலில் தொற்றின் பரவல் குறைந்ததால், 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் செப்.1-ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன.
முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் உள்ளதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகைப் பள்ளிகளிலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் பள்ளிகளைத் திறக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து காணொலிக் காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.
இதில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு, கற்பிக்கும் முறை, நேரடி வகுப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும் விதம், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு அழைக்கும்போது மாணவர்களை எப்படி வகுப்பில் அமர வைப்பது என்பது குறித்த பல்வேறு தகவல்கள் ஆலோசிக்கப்பட்டன. இந்தக் கூட்டமானது சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தபிறகு உயரதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பள்ளிக் கல்வித்துறை ஆணையர், முதன்மைச் செயலாளர், தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
சுழற்சி முறையில் வகுப்புகளைத் தொடங்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இடப் பற்றாக்குறை, தொற்று அபாயம் உள்ளிட்ட காரணங்களால் இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக்குப் பிறகு விரைவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.