Breaking News

'நீட்' தேர்வுக்கான பயிற்சி:மாணவர்கள் பங்களிப்பு குறைவால் அரசுப்பள்ளி கவலை

'நீட்' தேர்வுக்கான பயிற்சி:மாணவர்கள் பங்களிப்பு குறைவால் அரசுப்பள்ளி கவலை

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் 'நீட்' தேர்வு பயிற்சியில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து வருகிறது.மருத்துவத்துறை படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வுக்கு அரசின் சார்பில் இலவசமாக பயிற்சி பெறுவதற்கு, கல்வியாண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது. மருத்துவப்படிப்புக்கு செல்ல விருப்பமுள்ள, கல்வித்தரத்தில் சிறப்பாக உள்ள பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவர்களை தேர்வு செய்து, அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டது.இதன் அடிப்படையில், 2019-20 கல்வியாண்டில், விடுமுறை நாட்களில், 'நீட்' பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டன.
     உடுமலை கல்வி மாவட்டத்தில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மையமாகக்கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்புகள் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நேரடி பயிற்சிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.கடந்த 16ம் தேதி முதல், ஏற்கனவே 'நீட்' தேர்வு பயிற்சி பெற்றுவந்த மாணவர்களுக்கு, ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மாணவர்களுக்கு, இணையதளத்தில் நுழைவதற்கான இணைப்பு மற்றும் 'பாஸ்வேர்ட்' அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் இந்த பயிற்சி எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இந்நிலையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு'நீட்' பயிற்சியில் மாணவர்களின் பங்களிப்பு குறைந்து வருவதாக தொடர்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'மாணவர்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்ட மையங்களிலும், அரையாண்டு தேர்வு வரை, ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
 அதன்பின்னர், அந்த பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தற்போது, மாணவர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்கிறார்களா என்பதை கேட்டு அறிந்துகொள்ள மட்டுமே முடிகிறது. தலைமையாசிரியர்களும் தொடர்ந்து நீட் பயிற்சி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி வருகிறோம். மாணவர்கள் இந்த தருணத்தை பயன்படுத்தி, நீட் தேர்வுக்கு நன்றாக தயாராகலாம். பெற்றோர், இந்த பயிற்சி எடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்,' என்றனர்.

No comments