Breaking News

90`s களின் அழகான தருணங்கள் இன்றைய கால குழந்தைகள் அனுபவிக்க முடியாமல் இழந்தவைகள் என்னென்ன ஒரு மீள்பார்வை

90`s களின் அழகான தருணங்கள் இன்றைய கால குழந்தைகள் அனுபவிக்க முடியாமல் இழந்தவைகள் என்னென்ன ஒரு மீள்பார்வை
இன்றைய குழந்தைகள் வெறும் செல்போன், வீடியோ கேம், கம்ப்யூட்டர் என்று சதா சர்வகாலமும் ஒரு எலக்ட்ரானிக் திரையின் முன்பாக மட்டுமே பொழுதை கழிக்கிறார்கள் என்பது ஏறக்குறைய எல்லா பெற்றோர்களின் கவலையாக, புலம்பலாக இருக்கிறது உண்மைதான்.

இன்றைய குழந்தைகள் 80கள், 90களில் இருந்த குழந்தைகளை போல, வெளியே போய் விளையாடுவதில்லை. கில்லி தாண்டு, கோலி, பம்பரம், பட்டம், கபடி, டயர் உருட்டு, நுங்கு வண்டி, கண்ணாமூச்சி, ஆகிய விளையாட்டுகள் விளையாடாத ஆண் பிள்ளைகளே கிடையாது. அதேபோல் பாண்டி, பல்லாங்குழி, கயிறு களைதல் (ஸ்கிப்பிங்), கோலாட்டம், கல்லாட்டம் என பெண் குழந்தைகளுக்கென விளையாட்டு இருந்தன.
இன்றோ சிறு பிள்ளைகள் முதல் வாலிபர் வரை ஒரே விளையாட்டு - கம்ப்யூட்டர் கேம்ஸ், அது செல் போனிலோ, லேப்டாபிலோ, ஐபாடிலோ, கம்ப்யூட்டரிலோ - ஆனால் எல்லாருக்கும் இந்த மின்னணு திரைதான் உயிர் நண்பன், விளையாட்டு தோழன்.


\ஏதோ ஜென்மாந்திர பந்தம் போல் பிள்ளைகளின் பார்வையோடு ஒட்டி இருக்கும் இந்த திரையை விட்டு பிள்ளைகளை இடம் பெயர்ப்பது பெற்றவர்களுக்கு பெரும்பாடுதான். ஐயோ பாவம் இன்றைய பெற்றவர்கள். ரொம்ப கஷ்டம்.
பெற்றோர்கள் படும் பாடு, நாணயத்தின் ஒரு பக்கம். ஆனால் இந்த நாணயத்தின் மறு பக்கத்தை நாம் புரட்டி பார்த்ததே இல்லை.

இன்றைய பிள்ளைகள் இப்படி வீடியோ கேம்ஸ், என்றே கதியாய் இருக்க யார் காரணம்?

இப்படி இன்று புலம்பி கொண்டிருக்கும் நேற்றைய குழந்தைகளாய் இருந்த இன்றைய பெற்றோரும், நேற்று முந்தைய குழந்தைகளாய் இருந்த இன்றைய தாத்தா பாட்டியும்தான்! புரியவில்லையா? வளர்ப்பு முறை பற்றி சொல்லவில்லை! இன்றைய மாறி விட்ட வாழ்க்கை முறைதான் காரணம்.

ஒன்றை நாம் ஒப்பு கொள்ள வேண்டும், இன்று பிள்ளைகள் வெளியே விளையாடவில்லை என்றால் முதலில் வெளியே விளையாட இடம் எங்காவது இருக்கிறதா? அப்படியே விளையாட நேர்ந்தாலும், நகரத்தில் உள்ள போக்குவரத்து நெரிசலில், பிள்ளைகள் வெளியே விளையாடினால் பாதுகாப்பு இருக்கிறதா ! போக்குவரத்து நெரிசல் குறைந்திருந்தாலும், பிள்ளைகளை ஐந்து நிமிடங்கள் வெளியே விட்டாலும், கடத்தப்பட்டு காணாமல் போகும் பேராபத்து இருக்கிறதே! அதிலும் பெண்குழந்தைகள் என்றால் - சொல்லவே வென்ற, எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ என்பது போல், எந்த வீட்டில் எந்த கிழவன், எந்த மாமா, எந்த அண்ணன் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வானோ தெரியாது.

இன்றைய சமுதாயம் இந்த (மன்னிக்க வேண்டும்) இந்த லட்சணத்தில் இருக்கும் போது, பிள்ளைகள் வெளியே விளையாடவில்லை என்று குறை கூற நமக்கு என்ன அருகதை இருக்கிறது ?

இவ்வளவு பெரிய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு என்ற அடிப்படை விஷயமே காணாமல் போயிருக்கும் இன்றைய நாட்களில் பிள்ளைகள் வெளியே விளையாடவில்லை என்பதை விளையாட விட முடியவில்லை என்று கொஞ்சம் மாற்றி சொல்வோமா?

பிள்ளைகள் பாதுகாப்பு என்பது பெரிய பிரச்னை என்றால் பெற்றோர்களின் மனப்பாங்கும் எப்படி மாறிப்போய் இருக்கிறது என்று கொஞ்சம் பார்ப்போமா?

நகர்ப்புற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு தங்கள் பிள்ளைகள் நாகரிகமாக, நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுபவராக சுருக்கமாக சொல்ல போனால் ரொம்ப elite ஆக- decent ஆக - style ஆக- மேற்கத்திய நாகரிக சாயல் நிறைய இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களாவே உள்ளனர். சேர்க்கும் பள்ளிக்கூடம் இங்கிலீஷ் மீடியம், பெண்பிள்ளைகளுக்கு பாப் கட்டிங், 40 டிகிரி அடிக்கும் கோடை வெயிலிலும், shoe socks டை என்று வெள்ளைக்காரன் விட்டு போன (மேற்கத்திய நாடுகளில் கூட குளிர் காலத்திற்கு மட்டுமே ஷூ சாக்ஸ், டை , வெயில் காலத்தில் பருத்தி உடைகளும் சாதாரண செருப்பும் தான் அணிகிறார்கள் என்ற உண்மையை எத்தனை பேர் ஒத்து கொள்வார்கள்) உடைகளை இன்றும் விடாமல் தொடரும் கலாச்சார மாறுதல்.

இந்த சூழ்நிலையில் என்ற பெற்றோர் தம் பிள்ளைகள் கோலி விளையாடுவதையும், ரப்பார் டயர் உருட்டுவதையும் ஒத்து கொள்வார்கள், எத்தனை பெற்றோர் தம் பெண்குழந்தைகள் பாண்டி விளையாடுவதையும், பல்லாங்குழி, கல்லாங்காய் விளையாட்டையும் ஏற்று கொள்வார்கள்? இந்த விளையாட்டுகள் எல்லாம் வசதி வாய்ப்பு இல்லாத ஏழை குழந்தைகள், மற்றும் கிராமத்து விளையாட்டுகள் என்று இன்றைய பெற்றோர்களின் மனதில் ஊறி போய் இருக்கும் உண்மையை ஒப்பு கொள்வார்களா?

டென்னிஸ், கிரிக்கெட், வாலிபால், ஸ்குவாஷ் என்று ஸ்டைல் ஆன மேற்கத்திய விளையாட்டுகளை பெரும் செலவு செய்து சேர்த்து விடுவார்களே தவிர இந்த மேற்கூறிய எளிய செலவில்லாத விளையாட்டுகளை விளையாட விட மாட்டார்கள் என்பது முற்றிலும் உண்மை.

கிணற்றடி, ஆற்று நீச்சல் நகரத்தில் காணாமல் போன மகிழ்ச்சியான கிராமப்புற விளையாட்டுகள்.

கிணறுகளும் ஆறுகளும் இன்று கிராமங்களிலேயே காணாமல் போய் விட்ட நிலையில், நகர்புறத்தை பற்றி சொல்ல ஒன்றுமில்லை. ஆக பிள்ளைகள் மாறவில்லை, நாமும் நம் வாழ்க்கை முறையும் சேர்ந்து பிள்ளைகளின் வாழ்க்கையை அடியோடு மாற்றி விட்டன. மனம் தொட்டு சொல்லுங்கள்:
உங்கள் பிள்ளைகளுக்கு fanta, பெப்சி, maaza, கோகோ என்று பானங்கள் விடுத்து எத்தனை பேர் நுங்கு, இளநீர், கரும்புச்சாறு, வாங்கி கொடுக்கிறீர்கள் ?

எத்தனை குழந்தைக்கு குர்குரே, லேஸ் என்று உருப்படாத தின்பண்டங்களை கொடுக்காமல், கடலை மிட்டாய், இளந்தம்பழம், நாகப்பழம், வாழைப்பழம், என்று நல்ல உணவு வகைகளை வாங்கி தருகிறீர்கள்?

ஆகவே மாறி போனது குழந்தைகள் அல்ல, அழகான வாழ்க்கையை நாம் வாழ்ந்து விட்டு, அழுக்கான ஆடம்பரமான வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கொடுக்கும் (கெடுக்கும்) அளவுக்கு நாம் மாறி விட்டோம் என்பதே உண்மை.

வாய்க்காலில் நீச்சல் அடித்து, வரும் வழியில் மாந்தோப்பில் மாங்காய் கடித்து, அப்படியே இளநீர் தோப்பில் இளநீர் குடித்து இயற்கையான காற்றை சுவாசித்து விட்டு வீட்டுக்கு வந்தோம், என்று பெருமையுடன் சொல்லி கொள்கிறோம்! !

மாந்தோப்புகளை அழித்து, தென்னந்தோப்பை உருக்குலைத்து, ஏரிகளை அடைத்து, ஒரு குழந்தைக்கு எட்டு வீடு வாங்கி, அதற்கு எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்து, ஆனால் அதன் ஒரு வாழ்க்கைக்கு ஒரு இயற்கையின் இன்பத்தை கொடுக்காமல் அதிபுத்திசாலியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !!

உங்கள் பிள்ளையை ஒரு நாள் தூரத்தில் இருக்கும் கிராமத்தில் விட்டு பாருங்கள்,

அவன் எப்படி தென்னந்தோப்பில் சந்தோஷமாய் ஓடுவான் என்று,

மாமரத்தில் வேகமாய் ஏறி மாங்காய் பறிப்பான் என்று,

நுங்கு வண்டியை எத்தனை ஆசையை ஓட்டுவான் என்று,

வாய்க்காலில் எத்தனை மணி நேரம் உட்கார்ந்து, வெளியே வர அடம் பிடிப்பான் என்று,

கரும்புக்கட்டில் காய்ச்சும் வெல்லத்தை எப்படி ஆசை ஆசையாய் சாப்பிடுவான் என்று ,

இத்தனை இத்தனை அழகான அவன் வாழ்க்கையை மண்ணோடு மண்ணாக்கி சிதைத்து,

AC ரூமுக்குள் அடைத்து வைத்து விளையாட ஒரு ஐபாடையும் கொடுத்து

அவன் வாழ்க்கையை பிடுங்கி அழித்து விட்டு

பிதற்றி கொண்டிருக்கிறோம், நீலி கண்ணீர் வடிக்கிறோம்,

இன்றைய குழந்தைகள் இதையெல்லாம் மிஸ் பண்ணுகிறதென!

No comments