Breaking News

தமிழ்நாட்டில் 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு - யார் இவர்கள்

தமிழ்நாட்டில் 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தேசிய விருது அறிவிப்பு - யார் இவர்கள்

2019-ம் ஆண்டு ஐசிடி விருது பெற்ற ஆசிரியர்கள் ஜெ.செந்தில் செல்வன், தங்கராஜா மகாதேவன், இளவரசன்

National ICT Award for the year 2018 and 2019.






தமிழ்நாட்டில் இருந்து 6 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்துக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2010-ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலைக் கொண்டு சிறப்பாகக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இந்த ஐசிடி விருது வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் என்சிஇஆர்டி சார்பில் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித்துறை சார்ந்து சிறந்த முறையில் தகவல் மற்றும் தொழில்நுட்பக் கலை மூலம் கற்பிப்பவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

தமிழகப் பிரதிநிதித்துவத்தின்படி 6 ஆசிரியர்கள் மாநிலம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனுப்பப்படுவர். அதில் அதிகபட்சமாக 3 ஆசிரியர்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்து கவுரவிக்கும். அந்த வகையில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆசிரியர்களின் பட்டியலை என்சிஇஆர்டி வெளியிட்டுள்ளது.

கரோனா காலம் என்பதால் இதற்காக நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் இணைய வழியில் நடைபெற்ற தேர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கற்பித்தல் மாதிரிகளை விளக்கினர்.

இதில் 2018-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 25 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

1.கணேஷ், (கணினி சார் வளங்களான வீடியோக்கள், விளையாட்டுகள், interactive apps வாயிலாகக் கணிதம் கற்பிப்பவர், மதிப்பீட்டில் புதிய அணுகுமுறையாக க்யுஆர் கோட் ஸ்கேனர் கொண்டு சில நிமிடங்களில் மதிப்பீடு செய்து கற்பிப்பவர்)

கிளரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

திருவாரூர் மாவட்டம்.

2.மனோகர் சுப்பிரமணியம் (க்யூஆர் குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை தயாரித்து மாணவர்களை கற்றல்- கற்பித்தல் செயல்பாடுகளில் ஆர்வமுடன் பங்கேற்கச் செய்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டவர்)

வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி,

கரூர் மாவட்டம்.

3.தயானந்த் (கற்றல் கற்பித்தலைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாணவர்களுக்குப் புரியும் விதத்திலும் அதேநேரத்தில் எளிமையாகவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 170-க்கும் மேற்பட்ட காணொலிகள் மற்றும் அனிமேஷன்களை உருவாக்கியவர், புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் பங்காற்றியவர்)

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,

திருப்பூர் மாவட்டம்.

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் கணேஷ், மனோகர் சுப்பிரமணியம், தயானந்த்

அதேபோல 2019-ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியலில் நாடு முழுவதிலும் இருந்து 24 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 3 ஆசிரியர்கள் விருது பெற்றுள்ளனர்.

அதாவது,

1.ஜெ.செந்தில் செல்வன், (குறைந்த செலவில் ஸ்மார்ட் போர்டை உருவாக்கியவர். கணிதப் பாடத்துக்கு ஜியாமென்ட்ரி, கிராஃப் உள்ளிட்டவற்றுக்கான வழிமுறை விளக்கங்களை எளிய முறையில் ‘பவர்பாயிண்ட் பிரசண்டேஷன்’ அமைத்தவர்)

மாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி,

சிவகங்கை மாவட்டம்.

2.தங்கராஜா மகாதேவன், (அனிமேஷன் பாடங்களை உருவாக்கி, சூழலியல் சார்ந்த வீடியோக்களைத் தயாரித்துக் கற்பிப்பவர்)

பாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

சேலம் மாவட்டம்.

3.இளவரசன் (தொழில்நுட்பத்தின் உதவியுடன் 22 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் தன் மாணவர்களை உரையாட வைத்தவர், அரசு அறிமுகப்படுத்தும் முன்னரே க்யூஆர் கோடு திட்டத்தைச் செயல்படுத்தியவர்)

வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,

சேலம் மாவட்டம்.

ஆகிய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐசிடி விருது மத்தியக் கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments