Breaking News

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக அரசு பள்ளி ஆசிரியைக்கு சாகித்ய அகாடமி விருது


     தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு, சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது, ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை மலையாள மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த திருவண்ணாமலையை சேர்ந்த எழுத்தாளர் கே.வி.ஜெயக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் 8 பதிப்புகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்ற, மனோஜ் குரூர் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ன்ன நாள்’ எனும் நாவல் உட்பட மொத்தம் 12 நூல்களை, மலையாளத்தில் இருந்து எழுத்தாளர் கே.வி.ஜெய தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.


   திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்தவர் கே.வி.ஜெய. கொளக்குடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முதுகலை தமிழ் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவரது கணவர் உத்திரகுமார், தனியார் பள்ளி மேலாளர். மகள் சகானா, மகன் அமரபாரதி ஆகியோர் முதுகலை பொறியியல் பட்டதாரிகள். இருவரும் மொழிபெயர்ப்பாளர்கள்.சாகித்ய அகாடமி விருது பெற்றது குறித்து கே.வி.ஜெய கூறுகையில், மலையாள எழுத்தாளர் மனோஜ்குரூர் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ எனும் நாவல் சங்ககால வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்த நாவலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்தேன். தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது, தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமாகவும், உற்சாகமாகவும் அமைந்திருக்கிறது. இனிவரும் காலங்கள் நேரடி படைப்புகளை உருவாக்க வாய்ப்பு அளிக்கும் என காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments