Breaking News

மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கம் - ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் துவக்கம்; ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம்
வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளிக்கும் வகையில், மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த திட்டம் மூலம் ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு தினசரி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று மருந்துகள் வழங்கவும், சிகிச்சைகள் அளிக்கவும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அளிக்கப்படும் பிசியோதெரபி கிச்சைகளை நேரில் சென்று பார்வையிட்ட முதலமைச்சர், வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவப் பணியாளர்களுக்கான புதிய வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகளையும் முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக பார்வையிட்டார். 257 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த மக்களை தேடி மருத்துவம் திட்டம், முதற்கட்டமாக 1,172 துணை சுகாதார மையம், 189 ஆரம்ப சுகாதார மையம், 50 சமுதாய நல வாழ்வு மையம், 21 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1400-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பெரு நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது ஏழு உறுதி மொழிகளில் அனைவருக்கும் நல்வாழ்வு என்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டதோடு, அனைவருக்கும் நலவாழ்வு என்பதை உறுதிப்படுத்தும் வகையிலேயே மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். சுமார் 25ஆயிரம் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்ற உள்ளதாகவும், 1 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்க திட்டம் வகுத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

No comments