Breaking News

பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட, 'நல்லாசிரியர்' விருதை, அரசிடம் ஒப்படைக்க வந்த நல்லாசிரியர்

     பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், தனக்கு வழங்கப்பட்ட, 'நல்லாசிரியர்' விருதை, அரசிடம் ஒப்படைக்க வந்தார். அதை வாங்க மறுத்த, தர்மபுரி கலெக்டர், அவரை திருப்பி அனுப்பினார்.தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையைச் சேர்ந்தவர், அல்லிமுத்து, 60. இவர், பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளிகளில், தலைமையாசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.இவர், 2013ல், நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், பணி ஓய்வு பெற்றார்.

    தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று சென்றவர், மனு ஒன்றை அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு பொதுத்தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும். தேர்வு நடத்தினால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மட்டுமின்றி, மனவளர்ச்சியும் பாதிக்கும்.எனவே, பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அரசு, எனக்கு வழங்கிய நல்லாசிரியர் விருதை, அரசிடமே ஒப்படைக்கிறேன்.இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார்.விருதை பெற மறுத்த, கலெக்டர் மலர்விழி, அவரிடமிருந்து மனுவை பெற்றுக் கொண்டார்.

   'போராட்டத்திற்கு எவ்வளவோ வழிகள் உள்ள நிலையில், நல்லாசிரியர் ஒருவர், தான் பெற்ற விருதை ஒப்படைக்கலாமா' என, அறிவுரை கூறினார்.மேலும், இது குறித்து, தலைமை செயலகத்தில் அதிகாரிகளிடம் பேசுவதாகவும், ஜன., 27ம் தேதி நடக்கும் குறைதீர் கூட்டத்தில், அரசிடமிருந்து பதில் பெற்று தருவதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, அல்லிமுத்து அங்கிருந்து சென்றார்.

No comments